சர்வதேச கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் ஜோ ரூட், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்

இந்த பட்டியலில் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளார்.

Update: 2024-09-21 12:58 GMT

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி சதம் அடித்து அசத்தினர். இறுதியில் இந்தியா 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் சதமடித்து அசத்திய சுப்மன் கில் 2022-ம் ஆண்டுக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் பாபர் அசாம், ஜோ ரூட் ஆகியோர் தலா 11 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தனர். தற்போது அவர்களை பின்னுக்கு தள்ளி கில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. சுப்மன் கில்: 12 சதங்கள்

2. பாபர் அசாம்/ஜோ ரூட்: 11 சதங்கள்

3.விராட் கோலி: 10 சதங்கள்

4. டிராவிஸ் ஹெட்/டேரில் மிட்சேல்: 9 சதங்கள்

Tags:    

மேலும் செய்திகள்