பாகிஸ்தான்-இலங்கை கடைசி டெஸ்ட்: இன்று 5-வது நாள் ஆட்டம்

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு 508 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-27 21:05 GMT

காலே,

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான காலேயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 378 ரன்களும், பாகிஸ்தான் 231 ரன்களும் எடுத்தன. 147 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வதுநாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்னுடனும், கேப்டன் திமுத் கருணாரத்னே 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 360 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தனது 9-வது சதத்தை எட்டிய தனஞ்ஜெயா டி சில்வா 109 ரன்களில் (171 பந்து, 16 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். கேப்டன் கருணாரத்னே 61 ரன்களும், ரமேஷ் மென்டிஸ் 45 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 508 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை யாரும் எட்டிராத இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 28 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உருவாகியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 26 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இமாம் உல்-ஹக் 46 ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 26 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. பாகிஸ்தானுக்கு இன்னும் 419 ரன்கள் தேவைப்படுவதால் அந்த அணி 'டிரா' செய்யும் முனைப்புடன் விளையாடும். கடைசி நாளில் சுழலில் மிரட்டினால் இலங்கை வெற்றி பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்