டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு எதிராக முதல் வீரராக வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
வங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கில் சதமடித்தார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 109 ரன் (13 போர், 4 சிக்ஸ்) அடித்து அவுட் ஆனார். தொடர்ந்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார்.
இறுதியில் இந்தியா 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர். இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேசம் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கில், 2-வது இன்னிங்சில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்காளதேச அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன பிறகு, 2-வது இன்னிங்சில் சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.