ரோகித், கோலி அல்ல... அந்த இரு வீரர்களுக்கு எதிராக திட்டங்கள் வகுப்பதே எங்கள் நோக்கம் - ஹேசில்வுட்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரும் நவம்பரில் தொடங்க உள்ளது.

Update: 2024-09-21 06:44 GMT

Image Courtesy: AFP

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரையும் கட்டுப்படுத்துவதே தங்களது இலக்காக இருக்கும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்திய அணியில் புதிதாக இணைந்துள்ள வீரர்களை கட்டுப்படுத்துவதில் நாங்கள் அதிக கவனம் கொடுக்க வேண்டும். அதற்கேற்றவாறு திட்டங்களை வகுக்க வேண்டும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லுக்கு எதிராக நாங்கள் அதிகம் விளையாடியது கிடையாது.

ஆனால், விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பிற வீரர்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக விளையாடியிருக்கிறோம். அதனால், அவர்களுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்