தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்

வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்ட் (109 ரன்) சதம் அடித்ததன் மூலம் தோனியின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

Update: 2024-09-21 08:04 GMT

Image Courtesy: AFP

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் வங்காளதேசத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அதிரடியாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 109 ரன் (13 போர், 4 சிக்ஸ்) அடித்து அவுட் ஆனார். தொடர்ந்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார். தற்போது ராகுல் - கில் இணை நிதானமாக ஆடி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் பண்ட் சதம் அடித்ததன் மூலம் தோனியின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் (6 சதம்) சாதனையை ரிஷப் பண்ட் (6 சதம்) சமன் செய்துள்ளார்.

இந்தியாவுக்காக அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர்கள்;

ரிஷப் பண்ட் - 6 சதம் (58 இன்னிங்ஸ்)

எம்.எஸ்.தோனி - 6 சதம் (144 இன்னிங்ஸ்)

விருத்திமான் சஹா - 3 சதம் (54 இன்னிங்ஸ்).

Tags:    

மேலும் செய்திகள்