இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆஸ்திரேலிய அணியில் இணைந்த 19 வயது வீரர்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-09-17 11:08 GMT

Image Courtesy: @ICC 

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.

ஒருநாள் தொடரில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் 2 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். கூப்பர் கன்னோலி கூடுதல் வீரராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் வேகப்பந்து வீச்சாளர் மஹில் பியர்ட்மேன் (வயது 19) மாற்று வீரராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் பியர்ட்மேன் சிறப்பாக பந்து வீசி 15 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 19 வயதான அவர் 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர்.வேகப் பந்துவீச்சாளர்களான சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மெரிடித் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் தற்போது கன்னோலி, பியர்ட்மேன் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்