'நடப்பு சாம்பியனை தோற்கடித்தது பெருமையான தருணம்' - ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் ரகுமான்

நடப்பு சாம்பியனை தோற்கடித்தது பெருமையான தருணம் என ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் தெரிவித்தார்.

Update: 2023-10-15 21:28 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று அரங்கேறிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

இந்த அட்டத்தில் 28 ரன் மற்றும் 3 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக மின்னிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் கூறுகையில், 'உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனை தோற்கடித்தது எங்களுக்கு பெருமைமிக்க தருணம்.

ஒட்டுமொத்த அணியின் மிகச்சிறந்த சாதனை. இத்தகைய வாய்ப்புகாகத் தான் கடினமாக உழைக்கிறோம். பேட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் அற்புதமான செயல்பாடு இதுவாகும். இந்த விருதை, எங்கள் நாட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்