ஆஸ்திரேலியா அல்ல..சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு அந்த அணிதான் கடும் சவால் அளிக்கும் - ஹர்பஜன் எச்சரிக்கை

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.;

Update: 2024-06-18 11:33 GMT

மும்பை,

கிரிக்கெட் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாக உள்ளது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வரும் 20-ம் தேதி எதிர்கொள்கிறது. இதனையடுத்து 22-ம் தேதி வங்காளதேசத்தையும், 24-ம் தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை விட ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று ஹர்பஜன் சிங் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஆப்கானிஸ்தான் மிகவும் நல்ல அணி. குறுகிய காலத்தில் அவர்களுடைய வளர்ச்சி அற்புதமாக இருக்கிறது. அவர்களிடம் ரஷித் கான், முகமது நபி உள்ளனர். இந்தத் தொடரில் அவர்களிடம்தான் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். பேட்டிங் துறையும் நன்றாக இருக்கிறது. அவர்கள் அதிர்ஷ்டத்தால் எதையும் விளையாடவில்லை.

அவர்களிடம் தற்போது 2023 உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவமும் இருக்கிறது. கடந்த உலகக்கோப்பையில் அவர்கள் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவை தோற்கடித்தனர். எனவே எந்த பெரிய அணியையும் தோற்கடிக்கும் பலம் ஆப்கானிஸ்தானிடம் இருக்கிறது. அதனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில் டாஸ் வென்றால் சில விஷயங்கள் அவர்களுக்கு சாதகமாக செல்லலாம். எனவே அந்தப் போட்டி இந்தியாவுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்