டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை - நாசர் ஹூசைன்
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.;
லண்டன்,
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதி ஆட்டத்திலும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி ஆட்டத்திலும் மோத உள்ளன.
இந்திய நேரப்படி முதலாவது அரையிறுதி ஆட்டம் நாளை காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியை கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை என்றும், கடந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து ஆடிய அதிரடி ஆட்டம் இம்முறையும் நடக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹூசைன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் என்று நான் கருதுகிறேன். அடிலெய்ட் நகரில் நடைபெற்ற கடந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அடித்து நொறுக்கிய விதம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இம்முறையும் அது ரிப்பீட்டாகும் என்று நான் சொல்வேன். பிட்ச் ஸ்லோவாக இல்லாத வரை இந்த இங்கிலாந்து அணி இந்தியாவை கண்டு பயப்படும் என்று நான் நினைக்கவில்லை.
அமெரிக்காவுக்கு எதிராக பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக நின்று வந்த போது கூட பட்லர் மற்றும் சால்ட் ஆகியோர் அடித்து நொறுக்கினார்கள். இருப்பினும் அவர்களின் பேட்டிங் பாதிக்கப்படக்கூடியதாக தெரிகிறது. எனவே பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும் போது அவர்களின் பேட்டிங் பாதிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.