ஆப்கானிஸ்தானுடன் விளையாட கூடாது: அரசியல்வாதிகள் கோரிக்கையை நிராகரித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது.;
லண்டன்,
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகளை வரும் 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட கூடாது என 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அரசியல்வாதிகளின் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பிப்ரவரி-26ல் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் லாகூரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது.