விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை - சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் சிறப்பாக செயல்படவே நான் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டேன்.

Update: 2023-12-06 02:23 GMT

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்த பின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சர்ச்சையை தொடர்ந்து 2022ம் ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார். கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும், அப்போது, பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சவுரவ் கங்குலி, நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை. இது குறித்து நான் பல முறை கூறியுள்ளேன். இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட விராட் கோலி விரும்பவில்லை. கோலி அந்த முடிவு எடுத்த பின்னர் நீங்கள் டி20 கேப்டனாக செயல்பட விரும்பவில்லையெனில் ஒட்டுமொத்தமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் இருந்து (ஒருநாள் மற்றும் டி20) விலகுவது நல்லது என்று நான் கூறினேன். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு (ஒருநாள் மற்றும் டி20) தனி கேப்டன், சிவப்பு பந்து கிரிக்கெட்டிற்கு (டெஸ்ட்) தனி கேப்டன் இருக்கட்டும் என்றேன்.

3 வகை கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவி வகிக்க விராட் கோலி விரும்பாததால் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பேற்கும் படி நான் கூறினேன். இந்திய கிரிக்கெட் சிறப்பாக செயல்படவே நான் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டேன். அந்த பணியில் இது ஒரு சிறிய பகுதி' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்