2வது தகுதி சுற்று; க்ளாசென் அரைசதம்...ஐதராபாத் 175 ரன்கள் சேர்ப்பு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக க்ளாசென் 50 ரன்கள் எடுத்தார்.;
சென்னை,
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்று வரும் 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 12 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ராகுல் திரிபாதி களம் இறங்கினார்.
சிறிது நேரம் அதிரடி காட்டிய திரிபாதி 15 பந்தில் 37 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 1 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 5 ரன்னிலும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டிராவிஸ் ஹெட் 34 ரன்னிலும், அப்துல் சமத் 0 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதன் பின்னர் க்ளாசென் மற்றும் இம்பேக்ட் வீரர் ஷபாஸ் அகமது ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் க்ளாசென் அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் களம் இறங்கினார்.
இறுதியில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக க்ளாசென் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆட உள்ளது.