விராட் கோலி பார்முக்கு திரும்ப அவரிடம் எதிரணி பாகிஸ்தான் என்று மட்டும்... - அக்தர் கருத்து
விராட் கோலி சமீப காலமாக தடுமாற்றமாக பேட்டிங் செய்து வருகிறார்.;
கராச்சி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீப காலமாக தடுமாற்றமாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேவேளை எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் நிச்சயம் வலுவான கம்பேக் கொடுப்பார் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி பார்முக்கு திரும்ப அவரிடம் எதிரணி பாகிஸ்தான் என்று மட்டும் சொல்லிப் பாருங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கலகலப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியை நீங்கள் பார்முக்கு திருப்ப விரும்பினால் அவரிடம் எதிரணி பாகிஸ்தான் என்று மட்டும் சொல்லுங்கள். பாகிஸ்தானுக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் அவர் விளையாடிய ஆட்டத்தை மட்டும் பாருங்கள்" என்று கூறினார்.
விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனை சுட்டிக்காடி அக்தர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.