சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்..? முகமது அமீர் கணிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது.;
கராச்சி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்காளதேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளதாக முகமது அமீர் தெரிவித்துள்ளார். ஏனெனில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவையும் தென் ஆப்பிரிக்காவையும் அதனுடைய சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வீழ்த்தியதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணிலும் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணிலும் பாகிஸ்தான் வீழ்த்திய விதம் வெளிநாடுகளில் அவர்களுடைய பலத்தை காண்பிக்கிறது. அந்த சமீபத்திய செயல்பாடுகளை வைத்து இம்முறை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் இந்தியா பெரிய தொடர்களில் எப்போதும் வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாகவே இருக்கிறது.
ஆனால் இந்திய அணி தங்களுடைய சமீபத்திய மோசமான தோல்விகளால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து அழுத்தத்திற்குள் தவிக்கிறது. அப்படிப்பட்ட இந்திய அணிக்கு பும்ரா விளையாடாமல் போனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்தியாவுக்கு அவர் சிறந்த பந்துவீச்சாளராக முன்னின்று அணியை வழி நடத்தி வருகிறார். அவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் அட்டாக்கின் பலம் 40 - 50 சதவீதமாக குறைந்து விடும்" என்று கூறினார்.