இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பீருக்கு பதிலாக அவரை பயிற்சியாளர் ஆக்கலாம் - இங்கிலாந்து முன்னாள் வீரர்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கம்பீர் பொருந்த மாட்டார் என்று மான்டி பனேசர் கூறியுள்ளார்.;
லண்டன்,
டிராவிட்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியதுடன் 10 வருடங்கள் கழித்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கம்பீர் பொருந்த மாட்டார் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். எனவே ராகுல் டிராவிட் அல்லது விவிஎஸ் லட்சுமணன் போன்றவர்கள் இந்தியாவின் டெஸ்ட் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கவுதம் கம்பீருக்கு அதிகமான பணிச்சுமை இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் இப்போதுதான் பயிற்சியாளராக வந்துள்ளார். சில நேரங்களில் அது சீனியர் வீரர்களுக்கும் கடினமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பாக இவருடன் சேர்ந்து நாம் விளையாடினோம். ஆனால் தற்போது இவர் எப்படி விளையாட வேண்டும் என்று நமக்கு சொல்கிறார் என சில சீனியர் வீரர்கள் நினைப்பார்கள். அதே போல ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பேட்ஸ்மேனாக அவருடைய புள்ளி விவரங்கள் நன்றாக இல்லை. ஆஸ்திரேலியாவில் அவரின் சராசரி வெறும் 23 ஆகும். இங்கிலாந்து மண்ணில் அந்தளவுக்கு கூட அவர் சராசரியை கொண்டிருக்கவில்லை
வெளிநாடுகளில் ஸ்விங் பந்துகளை எப்போதும் கம்பீர் நன்றாக எதிர்கொண்டதில்லை. எனவே அவர் பயிற்சியாளர் பதவியை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டாரா? அல்லது அவர் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது பற்றி இந்திய தேர்வாளர்கள் முடிவெடுக்க வேண்டும். டெஸ்ட் பயிற்சியாளராக லட்சுமணன் போன்றவரை கொண்டு வரலாம். அவரும் ராகுல் டிராவிட் போல அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டவர்.
அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்திய ஏதேனும் இந்திய ஜாம்பவான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருக்கலாம். குறிப்பாக லட்சுமணன் போன்றவர் ஸ்விங் பந்துகளை உங்களால் தூக்கி அடிக்க முடியாது என்று கூறினால் இந்திய வீரர்கள் கேட்பார்கள். ஆனால் கம்பீர் போன்றவர் சொன்னால் அவர் சொல்லட்டும் நாம் நம்முடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற வகையில் இந்திய வீரர்கள் செயல்படுவார்கள்" என கூறினார்.