கபில்தேவை துப்பாக்கியால் சுட சென்றேன் - யுவராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.;

Update:2025-01-13 15:31 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். இருப்பினும் அவரால் முன்பு போல் அசத்த முடியவில்லை. அதன் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர், 2019ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஒரு இந்திய முன்னாள் வீரர் ஆவார். அவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவ்வப்போது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறும் யோக்ராஜ் சிங் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், "கபில்தேவ், இந்திய அணி, வடக்கு மண்டலம் மற்றும் அரியானா அணியின் கேப்டனாக இருந்தபோது எந்த காரணமும் இன்றி என்னை அணியில் இருந்து நீக்கினார். இதுகுறித்து அவரிடம் கேட்கும்படி எனது மனைவி கூறினார். அதற்கு நான் கபிலுக்கு சரியான பாடம் கற்பிப்பேன் என கூறி விட்டு, துப்பாக்கியுடன் அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது கபில்தேவ் தனது தாயாருடன் வெளியே வந்தார். நான் அவரை பல முறை திட்டி தீர்த்தேன். உன்னால் ஒரு நண்பனை இழந்து விட்டேன். அதற்குரிய பலனை நீ அனுபவிப்பாய் என்று ஆக்ரோஷமாக கத்தினேன்.

உன்னே சுடுவதற்குதான் நான் இங்கு வந்தேன். ஆனால் உன்னுடன் பக்திமிக்க தாயார் இருப்பதால் சுடவில்லை என்று கூறி திரும்பி வந்தேன். அதோடு அந்த தருணத்தில் நான் ஒரு முடிவை எடுத்தேன். இனி கிரிக்கெட் விளையாடக்கூடாது என்பதுதான் அந்த முடிவு. அதன் பிறகுதான் என் மகனை கிரிக்கெட்டில் தடம் பதிக்க வேண்டும் என்று விரும்பினேன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற போது, கபில்தேவுக்கு சில செய்திதாளை அனுப்பி, உங்களைவிட எனது மகன் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார் என்று கூறினேன்.

கபில்தேவ் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் எனக்கு எதிராக செயல்பட்டனர். நான் ஒருபோதும் பிஷன் சிங் பேடியை மன்னிக்கவில்லை. அவர் படுக்கையிலேயே இறந்துவிட்டார். நான் அணியில் இருந்து நீக்கப்பட்போது அணி தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த ரவீந்திர சதாவை தொடர்பு கொண்டு கேட்டேன். அப்போது பிஷன் சிங் பேடி (தேர்வுக்குழு தலைவர்) என்னை தேர்வு செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் நான் சுனில் கவாஸ்கரின் ஆள் என்று கூறினார். அவர் இப்படி கூற முக்கிய காரணம் நான் மும்பையில் கிரிக்கெட் ஆடியதுதான். உண்மையில் நான் சுனில் கவாஸ்கருடன் நெருக்கமாக இருந்தேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்