சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நான் தேர்வு செய்யப்பட்டால்... - இந்திய வீரர் பேட்டி
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.;
மும்பை,
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்காளதேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
ஆனால் இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும்? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கடைசியாக நடைபெற்று முடிந்த ஒருநாள் உலககோப்பை தொடரில் நானும் கே.எல் ராகுலும் மிடில் ஆர்டரில் முக்கியமான ரோலில் விளையாடினோம். அந்த தொடரில் நாங்கள் இருவரும் இணைந்து மிகச்சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தோம். இறுதி போட்டியில் மட்டும் நாங்கள் விரும்பிய வழியில் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது வருத்தம்.
எனவே இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்த காத்திருக்கிறோம். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்பட்டால் உண்மையிலேயே அது எனக்கு பெருமைக்குரிய தருணமாக இருக்கும். அதோடு இம்முறை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற என்னால் முடிந்த அனைத்தையும் வெளிப்படுத்துவேன்" என்று கூறினார்.