எடப்பாடியில் சவுந்தரராஜ பெருமாள் தெப்பத்தேர் உற்சவம்

எடப்பாடியில் சவுந்தரராஜ பெருமாள் தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-08 22:02 GMT

எடப்பாடி:

தெப்பத்தேர் உற்சவம்

எடப்பாடி மேட்டு தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையில் சவுந்தரராஜ பெருமாள் தெப்பத்தேர் உற்சவம் நடப்பது வழக்கம்.

இதையொட்டி சவுந்தரராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெரிய ஏரியை கடந்து மறுபுறம் உள்ள வெள்ளூற்று பெருமாள் சன்னதிக்கு செல்வார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு மீண்டும் அங்காளம்மன் கோவிலுக்கு திரும்புவது வழக்கம்.

சாமி தரிசனம்

இந்த ஆண்டு புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையான நேற்று தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. முன்னதாக சந்தனம், ஜவ்வாது, பன்னீர், இளநீர், தேன் மற்றும் பல்வேறு திரவியங்களால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன், தாமரை பல்லக்கில் பெரிய ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஏறி, பெரிய ஏரியின் மறுகரையில் உள்ள வெள்ளூற்று பெருமாள் சன்னதிக்கு சென்றார். அப்போது திரளான பக்தர்கள் ஏரியின் இருபுறமும் நின்றவாறு மலர்தூவி, சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோடி தீபம்

பின்னர் வெள்ளூற்று பெருமாள் சன்னதியில், சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் திருக்கோடி தீபமும் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்