புரட்டாசி சனிக்கிழமை தளிகை: பெருமாள் அருள் கிடைக்க இப்படி வழிபடுங்கள்..!
சனிபகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கமாக உள்ளது.;
புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாட்டில் தளிகை அல்லது படையல் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றியும், தளிகை போட்டும் பெருமாளை வழிபடுகிறார்கள்.
சனிபகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து தளிகை போட்டு பெருமாளை வழிபடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, புரட்டாசியின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வழிபடுவது சிறப்பு. புரட்டாசி மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் வந்தால் ஐந்தாவது சனிக்கிழமையிலும் படையல் போட்டு வழிபடலாம்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் செப்டம்பர் 21 மற்றும் 28, அக்டோபர் 5 மற்றும் 12 என நான்கு சனிக்கிழமைகள் வருகின்றன. செப்டம்பர் 21 அல்லது அக்டோபர் 5-ல் தளிகை போட்டு வழிபடலாம்.
தளிகை இடும் முறை
வீட்டில் உள்ள பெருமாளின் உருவப் படத்தை ஒரு மனைப்பலகையில் எடுத்து வைத்து அழகாக அலங்கரிக்கவேண்டும். தங்களுக்கு கிடைக்கும் மலர்களை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். குறிப்பாக, பெருமாளுக்கு பிடித்தமான துளசி இருப்பது அவசியம். பெருமாளின் படத்திற்கு முன் சிறிய விநாயகர் விக்ரஹம் அல்லது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் பெருமாள் படத்திற்கு முன் 3 இலைகள் போட்டு 5 வகை சாதத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், தேய்காய் சாதம், தயிர் சாதம், வெங்காயம் சேர்க்காமல் மிளகு மட்டும் போட்டு செய்யும் உளுந்து வடை, சுண்டல், பானகம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். மாவிளக்கு படைத்து வழிபடும் பழக்கம் இருந்தால் அதையும் சேர்த்து வழிபடலாம். இந்த சாதங்களை வரிசையாக வைத்தும் வழிபடலாம் அல்லது இந்த சாதங்களைக் கொண்டு பெருமாளின் திருமுகத்தை வரைந்தும் படைத்து வழிபடலாம். கோவிந்த நாமம் சொல்லி வழிபட்ட பிறகு, தளிகையில் வைக்கப்பட்ட சாதத்தை நாம் சாப்பிட வேண்டும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் என்பது பெண்கள் மட்டுமல்ல வீட்டில் உள்ள அனைவரும் இருக்கலாம். புரட்டாசி சனிக்கிழமையில் உபவாசம் இருந்து பகலில் தளிகை போட்டு வழிபட்ட பிறகு அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.