திருமலையில் அனந்த பத்பநாப விரத வழிபாடு- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலையில் வராகஸ்வாமி கோவிலை ஒட்டி உள்ள சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

Update: 2024-09-17 07:55 GMT

ஆவணி மாத சுக்லபட்ச சதுா்த்தசியான அனந்த சதுர்த்தசி என்பது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த தினம் ஆகும். இந்த திதியில்தான் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு தோன்றியதாக ஐதீகம். அனந்தா அல்லது ஆனந்தா என்பது முடிவில்லாத அல்லது எல்லையில்லாத என்று பொருள். எனவே, இந்த நாளில் ஆனந்த பத்மநாப விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவதன்மூலம் அளவற்ற நன்மைகளையும், ஆனந்தத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத சுக்லபட்ச சதுா்த்தசி அன்று அனந்த பத்மநாப விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அனந்த பத்மநாப விரத வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி வராகஸ்வாமி கோவிலை ஒட்டி உள்ள சுவாமி புஷ்கரணியில் (தெப்பக்குளம்) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்காக ஏழுமலையான் கோவிலில் இருந்து சுதர்சன சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்து புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். தெப்பக்குளக் கரையில் எழுந்தருளிய அவருக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்கள் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த வழிபாடு மற்றும் சடங்குகள் முடிந்து சக்கரத்தாழ்வார் மீண்டும் திருமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டார்.

அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 108 ஸ்ரீ வைணவ திவ்ய தேசங்களில் திருமலையும் ஒன்று என்பதால், திருமலையில் அனந்த பத்மநாப விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்