குலசை தசரா திருவிழா: சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்
இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது. தசரா என்றதும் அனைவருக்கும் மைசூரில் நடக்கும் திருவிழா தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் தசரா குலசேகரன்பட்டினத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அப்போது மகிஷாசுரனை, முத்தாரம்மன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும்.
ஆலய சிறப்பு:-
அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.
முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல அம்மனும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிவது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் வியப்புடன் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார்.
ஞானம் என்றால் பேரறிவு. மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.
தசரா திருவிழா:-
இந்த ஆலயத்தில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றத்துடன் தசரா விழா தொடங்கும். கொடியேற்ற தினத்திற்கு முந்தைய இரவில் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும். முதல் நாள் துர்க்கை கோலத்தில் அம்மன் காட்சி தருவாள். 2–ம் நாள் விசுவகர்மேஸ்வரர் கோலத்திலும், 3–ம் நாள் பார்வதி கோலத்திலும், 4–ம் நாள் பாலசுப் பிரமணியர் கோலத்திலும், 5–ம் நாள் நவநீதகிருஷ்ணன் கோலத்திலும், 6–ம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், 7–ம் நாள் ஆனந்த நடராசராகவும், 8–ம் நாள் அலைமகள் கோலத்திலும், 9–ம் நாள் கலைமகள் கோலத்திலும் வீதி உலா வருவார். 10–வது நாள் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும்.
அங்கு மகிஷாசுர வதம் நடைபெறும். முதலில் மகிஷனின் தலை, அடுத்து சிம்ம தலை, பின்னர் மகிஷாசுரனின் தலையினையும் கொய்து வெற்றிக்கொடி நாட்டுவாள். இந்த காட்சி
பக்தர்கள் வேடம் போடுவது ஏன்?
தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வித, விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவர். இதற்கு காரண காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.
காளிவேட மகிமை
குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் கடும் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். கொடியேற்றத்திற்கு பின் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.