மணியோசையோடு வெளிப்பட்ட மணிகண்டீஸ்வரர்

மதுரை அடுத்த கீழமாத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ள உமா மகேஸ்வரி உடனாய மணிகண்டீஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Update: 2022-06-28 09:24 GMT

திருஞானசம்பந்தரால் பாடல் பாடப்பெற்ற சிறப்புமிக்க தலங்களில் இதுவும் ஒன்று.

மதுரை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவாலயங்கள் அனைத்தும், சிவபெருமானின் திருவிளையாடல்களால் உருவானவை. அப்படி ஒரு திருவிளையாடல் நடைபெறும்போது திருஞானசம்பந்தரால் கண்டடையப்பட்ட திருத்தலம் இது.

தல வரலாறு

சமணர்களுக்கும் திருஞானசம்பந்தருக்கும் புனல்வாதம் நடைபெற்றது. அப்போது திருஞானசம்பந்தர் விட்ட ஏடுகள் வைகை ஆற்றில் எதிர்திசையில் பயணப்பட்டன. அப்போது ஓரிடத்தில் பலத்த ஓசையுடன் பல்லாயிரக்கணக்கான மணிகள் ஒலிக்கும் ஓசை கேட்டது. அதைக் கேட்டு சம்பந்தரும், அப்பகுதியை ஆண்ட மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு ஓரிடத்தில் தோண்டியபோது சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த சிவலிங்கம் அமைந்த தலமே, மணிகண்டீஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

மணியோசை வெளிப்பட்ட இடத்தில் முதலில் தோண்டியபோது, மணல் வானுக்கும், பூமிக்கும் பறந்துள்ளது. இரண்டாம் முறை தோண்டியபோது, தண்ணீர் வெள்ளமாக ஊற்றெடுத்துள்ளது. மூன்றாம் முறை தோண்டியபோது சிவலிங்கத்தின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் வெளிப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

மண்ணில் இருந்து மணியோசையோடு வெளிப்பட்ட சிவலிங்கத்தை வெளியே எடுக்க முயன்றபோது, அது முடியாமல் போனது. எனவே திருஞானசம்பந்தர், ஈசன் இங்கேயே அருள்புரிய விரும்புவதை புரிந்துகொண்டு, மன்னனின் மூலமாக அங்கேயே ஆலயம் எழுப்பியுள்ளார்.

இவ்வாலயம் இசைக்கலைக்கு மிக முக்கியமான தலமாக விளங்குகிறது. இவ்வாலயத்தில் ஒலிக்கும் மணியோசையை கேட்டபிறகு, குருவிடம் இசையை கற்கத் தொடங்கினால், இசையில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவில் மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்ததாகும். அந்த நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.

மூலவர்: மணிகண்டீஸ்வரர்

அம்மன்: உமாமகேஸ்வரி

தீர்த்தம்: வைகை நதி

இங்கு வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, 'யோக தட்சிணாமூர்த்தி'யாக அருள்பாலிக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் 6-ம் நாளில், மணிகண்டீஸ்வரர் கோவிலின் சிறப்புகள் பற்றி கதையாகச் சொல்லும் நிகழ்வு நடத்தப் படுகிறது.

பொதுவாக லிங்கோத்பவருக்கு தனிச்சன்னிதிகள் இருப்பதில்லை. ஆனால் இங்கு லிங்கோத்பவர் சிறிய சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

ஈசனின் திருமுடியைத் தேடி அன்னப் பறவையாக பிரம்மனும், ஈசனின் திருவடியைத் தேடி வராகமாக மகாவிஷ்ணுவும் சென்றனர். இந்த திருக்கோலமே 'லிங்கோத்பவர்'. இவரது தலைப்பகுதியில் அன்னமும், கால் பகுதியில் வராகமும் இடம்பெற்றிருக்கும். இவ்வாலயத்திலும் அதே போன்ற அமைப்பு இருந்தாலும், லிங்கோத்பவரின் வலதுபுறம் பிரம்மாவும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேத சுந்தரமாணிக்கப் பெருமாள், நவக்கிரகங்கள், பைரவர், கருடன், அனுமன், பிரம்மா, லிங்கோத்பவர், காசி விசாலாட்சி அம்மன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். எனவே அவர்களுக்கும் இங்கு சன்னிதி இருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், மதுரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில், மேலக்கால் சாலையில் உள்ள கீழமாத்தூர் என்ற இடத்தில் வைகை நதிக்கு அருகில் சாலையோரம் அமைந்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்