ஆங்கில புத்தாண்டு: கோவில்களில் சிறப்பு பூஜை - சாமி தரிசனத்திற்கு குவிந்த மக்கள்
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
சென்னை,
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து இன்று 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் நடை அடைக்கப்படாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று வெங்கடாஜலபதியை தரிசித்தனர். அதுபோல திருத்தணி முருகன் கோவிலிலும் புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி திருக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
அதேபோல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் , திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி தேவாலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.