மகர விளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.;

Update: 2024-12-30 03:58 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிறப்பு பெற்ற மண்டல பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதன்பின்பு அன்று இரவு நடை சாத்தப்பட்டது.

சபரிமலையில் மண்டல பூஜையையொட்டி 41 நாட்களில் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இது கடந்த சீசனை விட 4 லட்சத்து 7 ஆயிரத்து 309 பேர் அதிகம். கடந்த மண்டல சீசனில் 28 லட்சத்து 42 ஆயிரத்து 447 பேர் தரிசனம் செய்து இருந்தனர்.

இந்தநிலையில் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

31-ந் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் காலை 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணி முதல் புஷ்பாபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெறும். அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு அய்யப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் எனவும், 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்