திருப்பதி திருமலையில் பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம்
அங்குரார்ப்பணம் நிகழ்வை முன்னிட்டு சகஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர உற்சவங்களின்போது, உற்சவம் எவ்வித குறையும் இல்லாமல் நடைபெறுவதற்காக அங்குரார்ப்பணம் எனும் நவதானிய முளைவிடும் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அவ்வகையில், பவித்ரோற்சவம் நடைபெற உள்ள நிலையில் நேற்று அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவிலில் இருந்து ஏழுமலையானின் சேனாதிபதி விஷ்வக்சேனர் தலைமையில் அர்ச்சகர்கள், புனித மண்ணை எடுத்து வசந்த மண்டபம் வந்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்து, மண்ணை முளைப்பாலிகையில் வைத்து அதில் நவதானியங்களை இட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்துகொண்டனர். அங்குரார்ப்பணம் நிகழ்வை முன்னிட்டு சகஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் 17-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் சமயப் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளால் தோஷங்கள் ஏற்படுகின்றன. தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. பவித்ரோற்சவம் நடைபெறும் 3 நாட்களும் மாலையில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional