இந்த ஏகாதசியில் கோ பத்ம விரதம் இருப்பது விசேஷம்..!

கோ பத்ம விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.

Update: 2024-07-16 06:40 GMT

ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். அவை ஒவ்வொன்றுமே ஒரு சிறப்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது, பெருமை வாய்ந்தது. இந்த ஏகாதசியை 'சயனி ஏகாதசி' என்பார்கள். 'பத்ம ஏகாதசி', 'தேவபோதி ஏகாதசி', 'விஷ்ணு சயன ஏகாதசி', 'தாயினி ஏகாதசி' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

விஷ்ணு பகவான் தன்னுடைய உலக கடமைகளை நிறைவேற்றிய பிறகு, பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்து நான்கு மாதங்கள் தியானத்தில் ஆழ்ந்த தினம் இதுவாகும். அந்த நான்கு மாதங்களும் 'சதுர்மாஸ்' என்று அழைக்கப்படுன்றன. ஆடி மாதம் என்பது பொதுவாகவே சிறப்புக்குரிய மாதமாகும். அதோடு மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த சந்திரனும், சூரியனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் சிறப்பைப் பெற்ற மாதமாகவும் இது திகழ்கிறது.

இந்த நாளில் கோ பத்ம விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. கோ என்னும் பசு வழிபாடு புராணங்களில் மிகச் சிறப்புக்குரியதாக சொல்லப்பட்டிருக்கிறது. பாற்கடலைக் கடைந்தபோது. அதில் இருந்து பல்வேறு பொருட்களும், உயிரினங்களும், தேவர்களும் வெளிப்பட்டனர், அவற்றில் கேட்டதை கொடுக்கும் 'காமதேனு' பசுவும் அடங்கும். இந்த பசுவிற்கு பட்டி, விமலி, சயனி, நந்தினி, கொண்டி என்ற ஐந்து குட்டிகள் பிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சிவபெருமான், நான்கு பசுக்களை நான்கு திசை தெய்வங்களுக்கு வழங்கியதாக சிவபுராணம் கூறுகிறது. அதன்படி இந்திரனுக்கு 'சுசிலை' என்ற பசுவும், எமனுக்கு 'கபிலை' என்ற பசுவும், வருணனுக்கு 'ரோகிணி' என்ற பசுவும், குபேரனுக்கு 'காமதேனு' என்ற பசுவும் வழங்கப்பட்டுள்ளது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்து அருள்புரிகின்றனர்.

ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, 'கோ பத்ம விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் காலையில் எழுந்ததும் நீராடுவது அவசியம். பின்னர் பசு மாடு வைத்திருப்பவர்கள், அந்த பசுவை கட்டி வைத்திருக்கும் கொட்டிலில் (பசு கொட்டில் இல்லாதவர்கள், பூஜை அறையில் செய்யலாம்) பச்சரிசி மாவால், தாமரைப் பூ போன்று வரைந்து கோலம் போட்டு விட்டு, பின்னர் சிறிய சிறிய கோலங்களாக தாமரைப்பூ இதழ்களுடன் 33 கோலங்கள் போட வேண்டும். இதனை பல வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கலாம். இந்த கோலங்களின் நடுவில் பெருமாளும், தாயாரும் இருக்கும் படத்தை வைக்க வேண்டும். லட்சுமி நாராயணர் படம் அல்லது விக்கிரகம் இருந்தால் அவற்றை வைக்கலாம். இல்லையெனில் கலசம் வைத்து பூஜிக்க வேண்டும்.

பூஜை தொடங்கியதும், ஓம் கேசவா நமஹா, ஓம் நாராயணா நமஹா, ஓம் மாதவா நமஹா, ஓம் கோவிந்தா நமஹா, ஓம் விஷ்ணு நமஹா, ஓம் மதுசூதனா நமஹா, ஓம் திரிவிக்கிரமா நமஹா, ஓம் வாமனா நமஹா, ஓம் ஸ்ரீதரா நமஹா, ஓம் ஹ்ருஷிகேஷா நமஹா, ஓம் பத்மநாபா நமஹா. ஓம் தாமோதரா நமஹா என்ற 12 நாமங்களை சொல்லி இறைவனை ஆவாகனம் செய்ய வேண்டும். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 33 முறை இறைவனை சுற்றி வர வேண்டும். பூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை வைத்து, 33 வெல்லத்தில் செய்த அப்பத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும். பூஜையின் முடிவில் அந்த நைவேத்திய பிரசாதத்தை 33 பேருக்கு பகிர்ந்து கொடுக்கலாம்.

இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள். அவர்களுக்கு விஷ்ணு பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். இந்த நாளில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது மிகமிக சிறப்பானது.

பசுவை முதலில் பூஜித்து விட்டு இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் குடும்பத்தில் துன்பமான நிகழ்வுகள் நடக்காது. அதோடு மகாலட்சுமியின் அருள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும். மரண பயம் விலகும் என்பது ஐதீகம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்