உக்ரைனுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் வழங்கிய சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கிய சர்ச்சையில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது.

Update: 2022-10-05 08:58 GMT



கீவ்,


உக்ரைன் நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா மேற்கொண்டு வரும் போரானது 6 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது.

இந்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நேரிடையாக களம் இறங்கின. எனினும், நேட்டோவில் உக்ரைன் உறுப்பினர் அல்லாத சூழலில், படைகளை இறக்க முடியவில்லை. ஆனால், ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை வழங்குவதற்கான மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று, ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. இந்த தடைகளை கண்டு கொள்ளாமல் ரஷியாவும் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள், இருதரப்பு தூதரக பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

போருக்கு ஆதரவு தெரிவிக்காத வகையில், இரு புறமும் சாராமல் தொடர்ந்து நடுநிலை போக்கை கடைப்பிடித்தன. பாகிஸ்தான் நாடும் நடுநிலை வகிக்கிறது என கூறப்பட்ட சூழலில், உக்ரைன் நாட்டுக்கு போருக்கு உதவியாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை ஐரோப்பாவை சேர்ந்த ஜியோ-பொலிடிக் என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. இதன்படி, பாகிஸ்தானில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அந்நாட்டின் இஸ்லாமாபாத் நகரை அடிப்படையாக கொண்ட டி.எம்.ஐ. அசோசியேட்ஸ் என்ற ஆயுத விற்பனை நிறுவனம், பல்கேரியா நாட்டை சேர்ந்த டிபன்ஸ் இண்டஸ்ட்ரி குரூப் என்ற நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து, உக்ரைனிய அரசுக்கு தேவையான ஆயுதங்களை வினியோகித்து வந்துள்ளது.

இதேபோன்று, உக்ரைனின் ராணுவ அமைச்சகம் சார்பில், சுலோவேக்கியா நாட்டை அடிப்படையாக கொண்ட கெமிக்கா என்ற பாதுகாப்பு நிறுவனம், பாகிஸ்தானின் பாதுகாப்பு தளவாட தொழிற்சாலைகளுக்கு ஆயுத விற்பனையாளரான கெஸ்டிரால் என்ற நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, ஆயுத வினியோகம் நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கேற்றாற் போன்று, கெஸ்டிரால் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லியாகத் அலி பெக், உக்ரைனுக்கு அடுத்து உள்ள போலந்து, ருமேனியா மற்றும் சுலோவேக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பயணம் மேற்கொண்டார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்