இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Update: 2024-09-22 01:06 GMT

கொழும்பு,

இலங்கையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியத்துக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Live Updates
2024-09-22 02:53 GMT

இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரம்

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 2,62,057 வாக்குகள் (16.37 சதவீதம்)

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 7,96,941 வாக்குகள் ( 49.77 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 46,757 வாக்குகள் ( 2.92 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 4,12,845 வாக்குகள் ( 25.78 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 37,748 வாக்குகள் ( 2.36 சதவீதம்)

திலகர் (தமிழ் வேட்பாளர்) - 218 வாக்குகள் ( 0.01 சதவீதம்)

2024-09-22 02:45 GMT

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பகல் 12 மணி வரை நீட்டிப்பு

இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி ஊரடங்கு உத்தரவு பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலை கருத்தில் கொண்டு, நாளை (செப்டம்பர் 23ம் தேதி) இலங்கையில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2024-09-22 02:36 GMT

இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராகும் அனுரா குமார திசநாயகே

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே 50 சதவீத வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராக அனுரா குமார திசநாயகே தேர்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் அனுரா குமார திசநாயகேவை வெற்றியாளராக அறிவித்துள்ளனர்.

அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கேவின் நெருங்கிய கூட்டாளியான இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனிடையே வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் வலைதளத்தில், “நீண்ட மற்றும் கடினமான பிரச்சாரத்திற்குப் பிறகு, தேர்தல் முடிவுகள் இப்போது தெளிவாக உள்ளன. நான் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போதிலும், இலங்கை மக்கள் தமது முடிவை எடுத்துள்ளனர், மேலும் அனுரா குமார திசநாயகேவுக்கான அவர்களின் ஆணையை நான் முழுமையாக மதிக்கிறேன். ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது முக்கியம், நான் அதை தயக்கமின்றி செய்கிறேன். அனுரா குமார திசநாயகே மற்றும் அவரது கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

2024-09-22 01:35 GMT

இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் சுயேட்சையாக ரணில் விக்கிரசிங்கே களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரம்

ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) - 1,97,078 வாக்குகள் (18.37 சதவீதம்)

அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) - 5,65,664 வாக்குகள் ( 52.71 சதவீதம்)

நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) - 24,050 வாக்குகள் ( 2.24 சதவீதம்)

சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) - 2,36,655 வாக்குகள் ( 22.05 சதவீதம்)

அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) - 24,781 வாக்குகள் ( 2.31 சதவீதம்)

திலகர் (தமிழ் வேட்பாளர்) - 146 வாக்குகள் ( 0.01 சதவீதம்)

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட 8 மாவட்டங்களில் அனுரா குமார திசநாயகே முன்னிலையில் இருந்து வருகிறார்.

கொழுப்பு, வன்னி, கல்லே உள்ளிட்ட மாவட்டங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் அனுரா குமார திசநாயகே முன்னிலையில் உள்ளார். 

2024-09-22 01:14 GMT

இலங்கை அதிபர் தேர்தல்: அடுத்த அதிபர் யார்..? இன்று முடிவு தெரியும்

நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்ததும் தபால் வாக்குகளை எண்ணும் பணி மாலை 4 மணிக்கு தொடங்கியது. 4 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தபால் வாக்கெடுப்பில் தேர்தல் அதிகாரிகள், ராணுவம் மற்றும் போலீசார் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் மாலை 6 மணிக்கு நேற்று பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியது. பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியத்துக்குள் தெரியவரும்.

2024-09-22 01:11 GMT

இலங்கை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டி - 75 சதவீத வாக்குகள் பதிவு

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும் அவர் சுயேச்சையாக களமிறங்கினார். ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள்சக்தி முன்னணி சார்பில் களம் கண்டார்.

மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில், சில தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

எனினும் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அனுரா குமார திசநாயகே ஆகிய மூவருக்கு இடையில் தான் கடுமையான மும்முனை போட்டி நிலவியது.

2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர். இவர்களுக்காக இலங்கையின் 22 மாவட்டங்களில் 13,400-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்பாகவே மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைநகர் கொழும்புவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார். அதேபோல எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும் கொழும்புவில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் சென்று வாக்களித்தார். தேர்தலை நடத்தும் பணிகளில் சுமார் 2 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்ய நாடு முழுவதும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த தேர்தலில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் இருந்து 78 பிரதிநிதிகளும், காமன்வெல்த் அமைப்பில் இருந்து 22 பிரதிநிதிகளும், ஆசியான் தோ்தல் கண்காணிப்பு அமைப்பில் இருந்து 9 பிரதிநிதிகளும் அதிபர் தேர்தலை பார்வையிட்டனர்.

இலங்கையை பொறுத்தவரையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். வாக்களிக்க தகுதியுடைய 1 கோடியே 70 லட்சம் பேரில் 90 லட்சம் பேர் பெண்கள் ஆவர். அந்த வகையில் நேற்றைய தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்தனர். அதேபோல் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவுபெற்றது. மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024-09-22 01:08 GMT

இலங்கை அதிபர் தேர்தல்

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார்.

பின்னர் அவர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இவர்களது ஆட்சி காலத்தில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை எட்டியது. இதனால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் மெல்ல மெல்ல தீவிரம் அடைந்த நிலையில், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை சுற்றிவளைத்தனர். இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கேயின் ஆட்சி காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீள தொடங்கியது. சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் சற்று முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21-ந் தேதி நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்