'இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புகின்றன' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புவதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.;
மாட்ரிட்,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் ஸ்பெயின் நாட்டு தூதர்களின் சர்வதேச மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"ஸ்பெயின் நாட்டின் சர்வதேச தூதர்களிடையே உரையாற்ற ஒரு வெளிநாட்டு மந்திரி அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இன்றைய உலகளாவிய சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் நல்ல நட்புறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன.
இந்தியா இன்று 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாடு, திறன்கள் மற்றும் செயல்பாடுகளை உலகம் நாடுகள் கவனிக்கின்றன. சர்வதேச பேச்ச்வார்த்தைகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
கடினமான காலங்களில், பல்வேறு தரப்பினருடன் பேசவும், உதவவும் தயாராக இருக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது பணம் அல்லது வளங்களைப் பற்றியது அல்ல, மாறாக இதயம் மற்றும் மனதைப் பற்றியது. பாலமாக செயல்படும் திறன், சிந்தனை மற்றும் நம்பகத்தன்மையை இந்தியா கொண்டிருக்கிறது."
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.