ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்

Update:2023-10-23 02:49 IST
Live Updates - Page 2
2023-10-23 04:07 GMT

சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என இஸ்ரேல் திடுக் தகவலை தெரிவித்து உள்ளது.

இதனை இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜோக் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் ஸ்கை நியூசுக்கு அளித்த பேட்டியில், இது அல்-கொய்தாவை அடிப்படையாக கொண்டது.

2003-ம் ஆண்டு அந்த பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட திட்டத்துடன் தொடர்புடையது. நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

2023-10-23 01:24 GMT

காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி தொடர்ந்து வழங்கப்படும்: பைடன், நெதன்யாகு ஒப்புதல்

காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி மற்றும் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன், தொலைபேசி வழியே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பேசும்போது கூறியுள்ளார்.

காசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி பணிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக நெதன்யாகுவை பைடன் தொடர்பு கொண்டு பேசினார் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

2023-10-22 23:01 GMT

கிரியா, டெல் அவிவ் ஆகிய இடங்களில் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர்..!!

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது டெல் அவிவில் உள்ள கிரியாவில் போர் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளுடன் பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்தி வருவதாக இஸ்ரேல் பிரதமரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-10-22 22:53 GMT

காசாவுக்கு விரையும் மனிதாபிமான உதவிகள்

காசாவில் ஒரு புறம் தாக்குதல் தீவிரமடையும் நிலையில், மற்றொரு புறமும் அங்கு மனிதாபிமான உதவிகள் விரைந்து வருகின்றன.

போர் தொடங்கிய 15 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் எகிப்தின் ராபா எல்லை வழியாக நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன. அதன் தொடர்ச்சியாக நேற்றும் உயிர்காக்கும் மருந்து மற்றும் நிவாரண பொருட்களுடன் லாரிகள் காசாவுக்குள் சென்றன. குண்டு மழைக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த போரில் இரு தரப்பிலும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2023-10-22 22:39 GMT

மத்திய கிழக்கு மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில், தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது - லாயிட் ஆஸ்டின்

அமெரிக்க ராணுவத்தின் டெல்டா வீரர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், குவைத், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரகசிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். அதே போல் காசாவிலும் டெல்டா வீரர்கள் ரகசிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும், இதற்காக இஸ்ரேலில் சுமார் 13,000 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தரப்பு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அதே சமயம் போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஈரான், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்க உதவிகள் நீண்டு கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் மிகவும் சக்திவாய்ந்த ‘தாட்' எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்புவதாக அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

2023-10-22 22:32 GMT

இஸ்ரேலில் அமெரிக்க படைகள்?

காசா மீது இடைவிடாமல் வான்தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் அங்கு தரைவழி தாக்குதல் நடத்தவும் ஆயத்தமாகி வருகிறது. இதற்காக காசா எல்லையில் நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை இஸ்ரேல் ராணுவம் குவிந்துள்ளது.

இந்த சூழலில் காசா மீது தரைவழி தாக்குதலை தொடங்குவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு மந்திரி சபையை கூட்டி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தாக்குதல் குறித்து மந்திரி சபை என்ன முடிவெடுத்தது என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் ரகசிய நடவடிக்கையில் அமெரிக்காவின் டெல்டா படை வீரர்கள் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

2023-10-22 22:28 GMT

சிரியா விமான நிலையங்களில் தாக்குதல்

ஹமாஸ் அமைப்பினர் மற்றும் பிற பயங்கரவாதிகள் அல் அன்சார் மசூதியில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வந்ததாகவும், எனவே அங்கு தாக்குதல் நடத்தியதாவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதனிடையே ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக சிரியா மற்றும் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலைய ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலால் இரு விமான நிலையங்களிலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.

2023-10-22 21:23 GMT

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 17-வது நாளாக நீடிக்கும் போர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் நகரங்களை தாக்கின. அதோடு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலை நிலைகுலைய செய்த இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின. அதுமட்டுமின்றி பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் அதிகமானோரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அடுத்த சில மணி நேரத்தில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. அப்போது முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போர் இன்று 17-வது நாளாக தொடர்கிறது. நாளுக்கு நாள் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.

24 மணி நேரத்தில் 266 பேர் பலி

இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர், டேனியல் ஹகாரி, கூறுகையில், “போரின் அடுத்த கட்டங்களுக்கு ஆயத்தமாக வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது” என்றார்.

அந்த வகையில் நேற்று அதிகாலை முதலே காசாவின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இதில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 177 சிறுவர்கள் உள்பட 266 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள அல் அன்சார் மசூதி வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்