லண்டனில் களை கட்டிய கீழாடை இல்லா தினம் - ஆண்கள், பெண்கள் கொண்டாட்டம்

லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள், எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு குறைந்த ஆடைகளை அணிந்து வாருங்கள் என பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.;

Update:2025-01-13 18:02 IST

லண்டன்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் குளிர்காலத்தில் பல்வேறு இடங்களிலும் குளிர் பரவி காணப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு, நோ டிரவுசர்ஸ் டே எனப்படும் கீழாடை இல்லா தினம் கொண்டாடப்பட்டது.

இதன்படி கீழாடைகளை அணியாமல் ஒரு சிலர் சட்டை மற்றும் டை அணிந்தபடியும், சிலர் குளிருக்கு ஏதுவாக கம்பளி ஆடை அணிந்தும் வந்திருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தபடியும், சிரித்து கொண்டும் இருந்தனர்.

ஆண், பெண் பாலின வேற்றுமையின்றி அனைவரும் சகஜத்துடன் காணப்பட்டனர். இதேபோன்று வயது வித்தியாசமின்றியும் ஆண்களும், பெண்களும் மேலாடைகளை மட்டும் வகை வகையாக அணிந்தபடி, ஆனால் கீழே உள்ளாடை தவிர்த்து வேறெதுவும் அணியாமல் காணப்பட்டனர்.

 

இதற்காக பேஸ்புக் பக்கத்தில் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு குறைந்த ஆடைகளை அணிந்து வாருங்கள். நீங்கள் உங்கள் கீழாடையை மறந்து வீட்டீர்கள் என்பது போல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குளிர்காலத்தில் இதுபோன்ற அரை நிர்வாண ஆடைகளை அணிந்தபடி வந்து ரெயிலில் பயணிப்பது என்பது முதன்முதலாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2002-ம் ஆண்டு தொடங்கியது.

உள்ளூர் நகைச்சுவை நடிகரான சார்லி டாட் என்பவரால் இது முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது. இது பார்ப்பதற்கு கேலியாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும் என அவர் நினைத்திருக்கிறார்.

அந்த தருணத்தில் நடந்த இந்த சம்பவத்தில், 7 பேர் இதேபோன்று அரை நிர்வாண கோலத்தில், அடுத்தடுத்த ரெயில் நிறுத்தங்களில் தலா ஒருவர் என்ற கணக்கில் ரெயிலில் ஏறியுள்ளனர். ஆனால், ஒருவரை ரெயிலில் இருந்த மற்றவர் கவனிக்காதது போன்று நடந்து கொண்டனர். அப்போது இது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

2008-ம் ஆண்டு 7-வது ஆண்டில் இந்த நிகழவு அடியெடுத்து வைத்தபோது, சர்வதேச நிகழ்வாக மாறியது. நியூயார்க் மற்றும் பிற 9 நகரங்களில் 900 பேர் வரை பங்கேற்றனர்.

இந்த நிகழ்வு, ஷாங்காய், பெர்லின், இஸ்தான்புல், லிஸ்பன், டோக்கியோ மற்றும் டொரண்டோ ஆகிய நகரங்கள் உள்பட உலக நாடுகளில் உள்ள 60 நகரங்களில் தற்போது விரிவடைந்து உள்ளது.

எதிர்பாராத மகிழ்ச்சி, இன்பம் மற்றும் குழப்பம் ஆகியவற்றுக்கான தருணங்களை ஏற்படுத்துவதே இதன் ஒட்டுமொத்த நோக்கம் ஆகும் என்று டாட் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வின்போது, ஆண் மற்றும் பெண் பயணிகள் ரெயிலில் பயணித்தபோது, ஒரு சிலர் தேர்வுக்கு தயாராவது போன்று புத்தகங்களை படித்தபடி காணப்பட்டனர். சிலர் பத்திரிகைகளில் அன்றாட செய்திகள், தகவல்கள் போன்றவற்றை படித்து கொண்டு எதுவும் தெரியாதவர்கள் போல் ரெயிலில் பயணித்தனர்.

சிலர், மொபைல் போனில் தெரிந்தவர்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்டும், சிலர் ஓரத்தில் நின்றபடியும் இருந்தனர். சிலர் ரெயிலில் தொங்கி கொண்டும், ஒரு சிலர் நடனம் ஆடியபடியும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்