பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்து உள்ளது.;
பலூசிஸ்தான்,
பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சஞ்ஜிதி பகுதியருகே நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 9-ந்தேதி திடீரென வாயுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர்.
இந்நிலையில், அவர்களை மீட்க மாகாண பேரிடர் மேலாண் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், முதலில் 4 பேரின் உடல்களை மீட்பு குழு மீட்டது. 3 ஆயிரம் அடி ஆழத்தில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவர்கள் தவிர, 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்க கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து நடந்த மீட்பு பணியின் ஒரு பகுதியாக, மீதமுள்ளவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதனால், சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்து உள்ளது.