பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.. இந்த முறையாவது இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா?

இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-01-13 16:12 IST

கெய்ரோ:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிடித்துச் சென்ற பணயக் கைதிகள் விடுதலை தொடர்பாக சுமுகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. ஆனால் கருத்தொற்றுமை ஏற்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் மீண்டும் முடங்கின.

இந்நிலையில், நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்திய இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, வரும் நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த ஒப்பந்தத்தை நிச்சயமாக ஏற்க மீண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு கத்தாரின் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்தனர். அதேபோல் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப், இஸ்ரேல் தரப்புக்கு அழுத்தம் கொடுத்து வந்தார் என்று பேச்சுவார்த்தையை நன்கு அறிந்த ஒருவர் கூறியிருக்கிறார்.

மத்தியஸ்தர்கள் வரைவு ஒப்பந்தத்தை இரு தரப்பினருக்கும் வழங்கியதாகவும், அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அந்த நபர் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பில் பங்கேற்ற பேச்சுவார்த்தையாளர்கள் இப்போது வரைவு ஒப்பந்தத்தை இறுதி ஒப்புதலுக்காக தங்கள் தலைவர்களுக்கு அனுப்புவார்கள். தலைமையின் முடிவைப் பொருத்து அடுத்தகட்ட நகர்வு இருக்கும்.

இந்த முறையாவது ஒப்பந்தம் ஏற்படுமா? என பாலஸ்தீனியர்களும் பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் எதிர்பார்க்கிறார்கள்.

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டன. மொத்தம் உள்ள 2.3 மில்லியன் மக்களில் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்ததால் இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பாலஸ்தீனியர்களிடையே குறைந்து வருகிறது.

"ஒவ்வொரு நாளும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கேள்விப்படுகிறோம். ஆனால் முடிவு எதுவும் ஏற்படவில்லை. எனவே, செயல்பாட்டிற்கு வந்தால்தான் போர் நிறுத்தம் இருப்பதாக நாங்கள் நம்புவோம்." என காசாவின் கான் யூனிஸ் பகுதியைச் சேர்ந்த மஸன் ஹம்மாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்