இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 17-வது நாளாக நீடிக்கும் போர் ... ... ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 17-வது நாளாக நீடிக்கும் போர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் நகரங்களை தாக்கின. அதோடு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலை நிலைகுலைய செய்த இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின. அதுமட்டுமின்றி பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் அதிகமானோரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அடுத்த சில மணி நேரத்தில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. அப்போது முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போர் இன்று 17-வது நாளாக தொடர்கிறது. நாளுக்கு நாள் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.

24 மணி நேரத்தில் 266 பேர் பலி

இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர், டேனியல் ஹகாரி, கூறுகையில், “போரின் அடுத்த கட்டங்களுக்கு ஆயத்தமாக வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது” என்றார்.

அந்த வகையில் நேற்று அதிகாலை முதலே காசாவின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இதில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 177 சிறுவர்கள் உள்பட 266 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள அல் அன்சார் மசூதி வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

Update: 2023-10-22 21:23 GMT

Linked news