அடுத்த தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்து வருவோம்

“அடுத்த தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்து வருவோம்” என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2022-10-30 18:19 GMT


"அடுத்த தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்து வருவோம்" என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

பா.ஜனதா சார்பில் மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்..ஏ., மாவட்ட தலைவர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு

பிரதமர் மோடி பசும்பொன் தேவர் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார். பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த குருபூஜை விழா மற்றும் தேவரை பற்றி அற்புதமாக எழுதி இருக்கிறார்.

அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து கொண்ட தேவர் என்று குறிப்பிட்டு, இந்த நாளிலே அவரது லட்சியத்தை ஏற்பதற்கு உறுதி ஏற்போம் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்

இந்த ஆண்டு பிரதமர் மோடியை குருபூஜை விழாவிற்கு பா.ஜ.க. அழைத்து வரவேண்டும் என்று இந்த பகுதி மக்கள் எண்ணி இருந்தனர். பிரதமரை இந்த மண்ணிற்கு அழைத்து வரவேண்டிய அனைத்து செயல்களையும் தமிழக பா.ஜ.க செய்யும் என்ற உறுதிமொழியை வழங்குகிறேன்.

வருகிற 11-ந் தேதி பிரதமர் மோடி 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். அதில் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியும் அடங்கும். இந்த விழாக்கள் எல்லாம் 4 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே அடுத்த ஆண்டு பிரதமரை இங்கு அழைத்து வருவோம். அதற்கான முயற்சிகளை எடுப்போம்.

அரசியல்

தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் பெயர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தேவருக்கு மிகப்பெரிய மரியாதை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது. பிரதமர் மோடியிடம் சமுதாயத்தலைவர்கள் இது குறித்து கோரிக்கை வைக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை பா.ஜ.க ஏற்படுத்தி கொடுக்கும்.

இந்த மண்ணில் அரசியல் பேசினால் அது சரியாக இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. எனவே இந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் அரசியலை தவிர்த்து விட்டு செல்கிறேன்.

பாசாங்கு காட்டுகிறார்கள்

கோவை குண்டுவெடிப்பு பற்றி அண்ணாமலை வதந்தி பரப்புகிறார் என்பது, காவல்துறை கொடுத்த செய்தி அல்ல. தமிழக டி.ஜி.பி கொடுத்த செய்தி. தமிழக காவல்துறையினர் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் சில அதிகாரிகள் தவறான நடவடிக்கைகள் எடுத்துவிட்டு பா.ஜ.க. கேள்வி கேட்கும்போது மொத்த காவல்துறையே அறிக்கை கொடுத்தது போல் ஒரு பாசாங்கு காட்டுகிறார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு நான் வரிக்கு வரி பதில் அளிக்கிறேன். சில விஷயங்களை சொல்ல வேண்டாம் என்று நினைத்தோம். எனவே எனது அறிக்கையில் அது பற்றிய தகவல்கள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்