"கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஜாதி, மதம், மொழி கடந்து, ஏன்.. நாடு கடந்தும் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது" -அமைச்சர் துரைமுருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மொட்டையடித்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தேமுதிக சேலம் வாழப்பாடி தொண்டர்கள்...!
கேப்டன் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து ஈவெரா சாலை வழியாக கோயம்பேடு கொண்டு செல்லப்படுவதால், அந்தப் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் அந்த வழியை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி மரியாதை செலுத்தும் இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கேப்டன் விஜயகாந்தின் இறுதி சடங்கை காண எல்.ஈ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் உடலைக் கண்டு மனமுடைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் நடிகர் பரத்.
விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - காவல்துறை தகவல்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் உடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் காவல்துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக அலுவலகம் அருகே கூடியிருக்கும் பொதுமக்கள் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்தின் மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.