சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

Update:2023-12-29 00:28 IST

தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து விஜயகாந்தின் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தீவுத்திடலில் மதியம் வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

Live Updates
2023-12-29 13:37 GMT

குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர்மல்க விடைகொடுக்க.. விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

2023-12-29 13:18 GMT

பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த காவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

2023-12-29 13:04 GMT

தேமுதிக அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டு விஜயகாந்த் மீதான அன்பை வெளிப்படுத்தினர்.

2023-12-29 12:51 GMT

சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர்.

2023-12-29 12:34 GMT

விஜயகாந்த் உடலுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 24  போலீசார் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர்.

2023-12-29 12:31 GMT

விஜயகாந்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

2023-12-29 12:29 GMT

தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், தெலுங்கானா கவர்னர் தமிழசை சவுந்தரராஜன்,ஓபிஎஸ், ஜெயக்குமார், ஜி.கே.வாசன்,முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

2023-12-29 12:25 GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தேமுதிக தலைமை அலுவகம் வந்தடைந்தது. இன்னும் சில நிமிடங்களில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

2023-12-29 12:17 GMT

ஒரு மாற்றுக்கட்சியை சார்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, குறையேதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2023-12-29 12:04 GMT

கேப்டன் விஜயகாந்தின் உடலை கொண்டு செல்லும் வாகனம் வேகமாக செல்ல தொடங்கியதால், கேப்டனுக்காக மக்களும் ஓடோடி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்