நெல்லையப்பர் கோயில் யானைக்கு உடல்நலக்குறைவு
யானை காந்திமதிக்கு கிரேன் உதவியுடன் கால்நடை மற்றும் வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.;
நெல்லை,
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில் யானை காந்திமதி, கடந்த 1985 ஆம் ஆண்டு நன்கொடையாளர்கள் மூலம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது யானைக்கு 56 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக காந்திமதி யானைக்கு பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக யானை காந்திமதி படுக்காமல் நின்றவரே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை காந்திமதி யானை படுத்து தூங்கிய நிலையில், மீண்டும் அதனால் எழ முடியவில்லை. இதனால் உடனடியாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து யானை காந்திமதிக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து கிரேன் உதவியுடன் கால்நடை மற்றும் வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.