ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வி.சி.சந்திரகுமாருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு - ஜவாஹிருல்லா அறிவிப்பு
வி.சி.சந்திரகுமாருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.;
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 17-ம் தேதி கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? அல்லது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாகவும், இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான 'இந்தியா' கூட்டணி வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.