இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
இந்தியாவின் நிலக்கரி ஏற்றுமதி உயர்வு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதியானது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 182.02 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக மின் வணிக நிறுவனமான எம்ஜங்சன் சர்வீசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 178.17 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்கியிருந்த வங்காளதேச இளைஞர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் போலியான ஆதார் அட்டை கொடுத்து தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து தீவிரவாத தடுப்பு குழு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், அருள்புரத்தில் 28 பேர், வீரபாண்டியில் 2 பேர், நல்லூரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், இந்திராவதி தேசிய பூங்காவில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழந்தது. யானை காந்திமதிக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. இதன்பின்னர் யானை காந்திமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. நித்திய பூஜைக்கு பின் நெல்லையப்பர் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
பரிகார பூஜைக்கு பின் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. யானை காந்திமதிக்கு கண்ணீர் மல்க பக்தர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.
டெல்லியின் பல இடங்களிலும் காலை முதல் பனிமூட்டம் சூழ்ந்து தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லிக்கு வந்து சேர வேண்டிய 25 ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
இவற்றில் மால்வா எக்ஸ்பிரஸ் ரெயில் 5 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகிறது. இதேபோன்று பரக்கா எக்ஸ்பிரஸ், ஹம்சபவர், பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், புருசோத்தம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
கடலூரிலுள்ள சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா இன்று விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தாயார் கருவறையை விட்டு வெளியே வந்து அருள்பாலித்தனர். விநாயகர், முருகன், நடராஜர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் வீதி உலா வந்தனர்.