வேலூரில் பெண் சிசுக்கொலை: பெற்றோருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

வேலூரில் பெண்சிசுக்கொலை விவகாரத்தில் கைதான பெற்றோருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

Update: 2024-09-07 10:39 GMT

 வேலூர், 

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்கிற சேட்டு (வயது 30). இவரது மனைவி டயானா (25). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், டயானா கடந்த மாதம் 27-ந் தேதி ஒடுகத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாய் டயானாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை அவசரமாக கணவர் ஜீவா வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் 4-ந் தேதி குழந்தையை பார்க்க டயானாவின் தந்தை சரவணன், தாய் கலைச்செல்வி சென்ற போது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளது.அப்போது சரவணன் வெளியில் சென்ற நேரத்தில் ஜீவா அவசரம், அவசரமாக வீட்டுக்கு அருகிலேயே குழி தோண்டி குழந்தையை புதைத்துள்ளார். எருக்கம்பால் கொடுத்து குழந்தையை கொன்று புதைத்ததாக டயானாவின் தந்தை சரவணன் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் நேற்று முன்தினம் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடல் தாத்தா சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டு ஒடுகத்தூர் ஆத்துமேடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

குழந்தையை கொன்ற ஜீவா, அவரது மனைவி டயானா ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஊசூர் அடுத்த சிவனாதபுரம் பகுதியில் வைத்து ஜீவா, டயானா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் வைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அணைக்கட்டு சாரதி, வேலூர் பிரத்திவ்ராஜ் சவுகான், இன்ஸ்பெக்டர் தமிழரசி, தடய அறிவியல் துறை நிபுணர்கள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 2-வதாக பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. கைதான இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்