மழை காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது: சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.60-க்கு விற்பனை

மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது.

Update: 2023-05-06 23:08 GMT

மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது.

பரவலாக மழை

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சில காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது. மழை எதிரொலியாக காய்கறிகள் விலை தற்போது உயர தொடங்கி உள்ளது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் ஒட்டன்சத்திரம், தாராபுரம், தாளவாடி, மைசூரு, ராசிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வருகிறது.

சின்ன வெங்காயம் விலை உயர்வு

தினமும் 20 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில் நேற்று வெறும் 9 டன் சின்ன வெங்காயம் மட்டுமே வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் சின்ன வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது. ஆனால் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆனது. வரும் நாட்களில் மழை பெய்தால் சின்னவெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்