திருவண்ணாமலை மண் சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்
வ.உ.சி. நகர் மக்கள் வெளியே வரத்தயார் என்றால் அரசு மாற்று இடம் வழங்க தயாராக உள்ளது என துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.;
திருவண்ணாமலை,
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.
அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் 7 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. அவர்கள் 7 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,
திருவண்ணாமலையில் உண்மையிலேயே மிகவும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. வ.உ.சி. நகர் மக்கள் வெளியே வரத்தயார் என்றால் அரசு மாற்று இடம் வழங்க தயாராக உள்ளது. மக்கள் வெளியே வந்தால் அவர்களுக்கென தனி திட்டம் போடப்படும். மண் சரிவு தொடர்பாக ஐ.ஐ.டி-க்கு மண் பரிசோதனை தர அறிவுறுத்தி உள்ளோம். மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஞ்சிய மீட்புப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.