பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது
தனிப்படை போலீசார் அழைத்து வந்த நிலையில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். இதனால் பாம் சரவணனை போலீசார் சுட்டு பிடித்தனர்.;
சென்னை,
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர், பிரபல ரவுடி 'பாம்' சரவணன் ஆவார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டவுடன் 'பாம்' சரவணன் சென்னையில் இருந்து தலைமறைவானார். அவர் மீது 6 கொலைவழக்குகள் உள்பட 33 வழக்குகள் உள்ளன.
கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இவருக்கு பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தது. புளியந்தோப்பு போலீசாரும் இவரை கைது செய்ய தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் சென்னை ரவுடி ஒழிப்பு போலீசார் அவரை டெல்லி உள்பட இடங்களில் தேடி வந்தனர்.
'பாம்' சரவணன் ஆந்திராவில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவரை துப்பாக்கிமுனையில் கைது செய்தனர்.ஆந்திராவில் இருந்து அவரை தனிப்படை போலீசார் அழைத்து வந்த நிலையில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். இதனால் பாம் சரவணனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இதில் காலில் காயம் அடைந்த பாம் சரவணன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.