திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகம் - அன்புமணி ராமதாஸ் இரங்கல்
திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய 7 பேர் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.
அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் 7 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. அவர்கள் 7 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த 7 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், ஒரு சிறுவன் உட்பட்ட மூவரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிவிட்டதாக பெருமிதப்படும் வேளையில், மண் சரிவில் சிக்கியவர்களை நம்மால் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இத்தகைய சூழல்களில் துரிதமாக செயல்பட்டு, உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.