திருவண்ணாமலை மண் சரிவு துயரம் நெஞ்சை பதற வைக்கிறது: விஜய்

பேரிடர் காலங்களில், அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

Update: 2024-12-02 17:12 GMT

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.

அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், மண் சரிவினால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. ஒரே குடும்பத்தில், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அவர், எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சை பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரை காக்கும் பேரிடர் மீட்பு படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப்பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்