சட்டத்துறை தன்னார்வலர்களுக்கு பயிற்சி நியமன ஆணை: அமைச்சர் ரகுபதி வழங்கினார்
சட்டத்துறை தன்னார்வலர்களுக்கு பயிற்சி நியமன ஆணைகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் பட்டப்படிப்பு அல்லது 3 ஆண்டு சட்டப் பட்டப்படிப்பு முடித்த 17 சட்டப் பட்டதாரிகளுக்கென தலைமைச் செயலக சட்டத் துறையில் தன்னார்வப் பயிற்சித் திட்டம் தொடங்கப்படும் என கடந்த 27.04.2022 அன்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியால் சட்டப் பேரவையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.
இதற்கென, ஒரு சட்டப் பட்டதாரிக்கு ஒரு மாதத்திற்கு உதவித் தொகையாக ரூ.20,000/- வீதம், 17 சட்டப் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் வருடத்திற்கான தலா 17 தன்னார்வ பயிற்சியாளர்கள்சட்டத் துறையில் பயிற்சியை நிறைவு செய்து உள்ளார்கள். மேலும், 2023-2024 ஆம் வருடத்திற்கான பயிற்சியினை நிறைவு செய்த 17 தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு கடந்த 29.11.2024 அன்று மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தற்போது 2024-2025 வருடத்திற்கான சட்டத் துறையில் 17 தன்னார்வ பயிற்சியாளர்கள் (Law Interns) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிக்கான நியமன ஆணையை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.