தர்மபுரியில் மழை பாதிப்பு: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தர்மபுரியில் மழை பாதிப்புகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.;
தர்மபுரி,
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழையும் பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று நாள் முழுவதும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இந்த கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தர்மபுரியில் மழை பாதிப்புகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்தத் தரைப் பாலத்தை மீண்டும் அமைப்பதற்கானப் பணியை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் அப்பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அரூர் பேரூராட்சி, வாணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட ஆற்றோர வீதி மக்கள், அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.