தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனை- அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

தக்காளி விலை ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனையான நிலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-09-14 22:30 GMT

தக்காளி விலை ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனையான நிலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தக்காளி விலை

காய்கறி விலை ஏற்ற இறக்கம், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளி விலை கிர் என்று உயர்ந்தது. அப்போது நாடு முழுக்க மிகப்பெரிய செய்தியாகவும் அது இருந்தது. தக்காளி பயிரிட்ட விவசாயிகள் ஒரே வாரத்தில் லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக மாறியதையும், தக்காளி தோட்டத்துக்குள் புகுந்து திருடர்கள் பறித்து சென்றதும், தக்காளி வேன் கடத்தப்பட்டதும் செய்தியாக வந்தன.

தக்காளி விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டதால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்தது. பின்னர் படிப்படியாக தக்காளி வரத்து அதிகரித்து, விலை குறையத்தொடங்கியது. கடந்த சில நாட்களாகவே தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்தது. அதுவும் குறைந்து ரூ.15, ரூ.10 என்று விற்கப்படுகிறது.

விவசாயிகள் பாதிப்பு

சந்தையிலேயே இத்தனை குறைந்த விலைக்கு தக்காளி விலைபோகும் நிலையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

தக்காளி விலை உயர்ந்தபோது அது மிகப்பெரிய பாதிப்பை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியது. அப்போது தக்காளி விளைவித்த விவசாயிகளுக்கு சற்று விலை உயர்வாக கிடைத்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, வரத்தும் அதிகரித்து இருக்கிறது. இதனால் விலையும் குறைந்திருக்கிறது.

அரசு கொள்முதல் செய்ய வேண்டும்

இப்போது மக்களுக்கு தாராளமாக தக்காளி கிடைக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறதா என்றால் இல்லை. நடவு செலவு கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் தக்காளியை குப்பைகளில் கொட்டுகிறார்கள். மாடுகளுக்கு கொட்டுகிறார்கள். விலை உயர்ந்தபோது மக்களுக்கு பாதிப்பு என்றதும் அரசு தலையிட்டு தக்காளியை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்தது.

அது போல, இப்போது விலை குறைந்துவிட்டது. விளைபொருட்களை வீணாக்காமல் அதையும் அரசு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும். பொதுமக்களுக்கும் போதிய தக்காளியும் கிடைக்கும். விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்