சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மையமாக மாறி வரும் தமிழ்நாடு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலும், நடமாட்டமும் அதிகரித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2024-09-09 08:35 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதையும், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் கடத்தலின் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களின் அளவும், தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய அரசின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளின் அளவு கடந்த 2021-ம் ஆண்டில் 12 கிலோ என்ற அளவில் இருந்ததாகவும், இது 2022-ம் ஆண்டில் 66 கிலோவாகவும், 2023-ம் ஆண்டில் 81 கிலோவாகவும் அதிகரித்திருப்பதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. 2024-ம் ஆண்டில் இதுவரை மட்டும் 57 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், நடப்பாண்டில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் அளவு 100 கிலோவைத் தொடும் வாய்ப்பு உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவை விட பல மடங்கு அதிக போதைபொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கக்கூடும். தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவில் 10 சதவீதம் கூட தமிழக காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டவை அல்ல. 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான போதைப்பொருட்களை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவினர்தான் பறிமுதல் செய்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் அங்கு கிலோ ரூ.50,000 - ரூ.1 லட்சம் என்ற விலையில் வாங்கப்பட்டு, சாலைவழியாகவும், தொடர்வண்டிகள் மூலமாகவும் தமிழ்நாட்டுக்குக் கடத்தி வரப்படுகிறது. சென்னையில் கிலோ ரூ. 7 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பன்னாட்டு சந்தையில் ரூ.10 கோடி வரை விற்கப்படுவதால் இந்தக் கடத்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

சென்னையிலிருந்துதான் இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு மெத்தபெட்டமைன் கடத்தப்படுகிறது. தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு சிறப்பாக செயல்பட்டால் இந்த வகைப் போதைப்பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுக்க முடியும். ஆனால், தமிழக அரசு போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, போதைப்பொருள்கள் கடத்தலில் தொடர்புடையவர்களுக்கு பதவி கொடுத்து தமிழக ஆளுங்கட்சி அழகு பார்க்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக, குறிப்பாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகுதான் போதைப்பொருள் கடத்தல் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால் அதற்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலும், நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் இளைய தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதையும், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்